டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடில்லி:


டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் கடந்த பிப்., மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இதில், பல பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அதேநேரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஆனாலும் 4 நாட்களாக தொடர்ந்த இந்த வன்முறையில் வடகிழக்கு டில்லியில் 54 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


வன்முறைக்கு சிலரின் சதியே காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், டில்லி ஜாமியா பல்கலை.,யை சேர்ந்த பி.எச்டி., மாணவர் மீரான் ஹைதர், சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டில்லி இளைஞரணி பிரிவின் தலைவராக உள்ளார். இதுதொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், மீரான், வாட்ஸ்ஆப் மூலமாக உத்தரப் பிரதேசத்திலிருந்து குண்டர்களை ஒழுங்கமைத்து, வன்முறை செய்யும் பகுதிகளை இலக்கு வகுத்துள்ளார், எனக் கூறினர்.